சுஜாதா என்கிற வழிப்போக்கன்

சுஜாதா இறந்து போனார் என்று படித்ததில் இருந்து மனது ஒரு மாதிரியாகக் கனக்கிறது. அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை. சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கு வலையுலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஏராளமான இரங்கல் வலைப்பதிவுகளைக் காண நேரிடலாம்.

1970களில் அவரின் நில் கவனி தாக்கு தொடர் தினமணிகதிரில் வந்தபோது நான் தொடக்கப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நான் ஒரு புத்தகப் புழு (அவரின் பல கதைகளில் வருவது போன்ற ஒரு typical புத்தகப் புழு நான்). என் தந்தை அப்போதைய பிரபல நாளிதழ்களுக்கு நிருபராக இருந்ததால் பலவகையான சஞ்சிகைகளையும் நாளேடுகளையும் தினமும் படிக்கின்ற வாய்ப்பை நான் வீட்டிலேயே பெற்றேன். நில் கவனி கொல் தொடரில் அவர் ஒரு பிரட்டா வகை கைத்துப்பாக்கியைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக விவரித்துவிட்டு, தொடரும் என்ற வரிக்கு மேல், அந்தத் துப்பாக்கி 18 இன்ஞ் தூரத்தில் என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது என்றார். அவ்வளவுதான், அன்றிலிருந்து சுஜாதா சுரம் பிடித்துவிட்டது. அப்போதெல்லாம் பெண்கள் பெயரில் நிறையபேர் கதை எழுத ஆரம்பித்திருந்தனர். பிற்பாடு நூலகத்தில் போய் சுஜாதா ஏற்கனவே எழுதிய கதைகளை, நாவல்களை எல்லாம் படித்தேன். அதுவும் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், லால்குடி என்று இவற்றைச் சுற்றியே எழுதியிருந்த பல நாவல்கள், காவிரிக்கரையின் குளிர்ச்சியில் மரத்தடியில் படுத்துக் கொண்டே படித்த மாதிரியான உணர்வுகள் இன்னும் நினைவிற்குள் இருக்கிறது. என்னை பெரிய அளவில் பாதித்த நாவல், பிரிவோம் சந்திப்போம். அதன்பின், அவரின் நாவல்களில் குறிப்பிட்டிருந்த தி.ஜானகிராமன், மற்றும் இன்னபிற நாவலாசிரியர்களின் நாவல்களைத் தேடிப் பி(டி)த்துப் படிக்கத் தொடங்கினேன். இவ்வாறாக நாவல்களை, கதைகளை சளைக்காமல் படிக்கும் வெறியை ஊட்டியவர் சுஜாதா என்றால் மிகையாகாது. ஏன் எதற்கு எப்படி என்ற தொடர் ஜூனியர் விகடனில் (அப்போது அதன் விலை நாற்பது காசு) வந்தபோது, சுஜாதா பற்றிய மரியாதை அதிகமானது. இவர் தொழில்நுட்பக் கேள்விகளையெல்லாம் இவ்வளவு எளிதாக விளக்கியிருக்கிறாரே என்பதால் அந்த மரியாதை. அப்போது தற்போதைய மாதிரி இன்டர்நெட் எல்லாம் பிரபலமாகவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்து நடையால் தன்னை தனிப்படுத்திக் காட்டி பேர் வாங்கியவர். விஞ்ஞானச் சிறுகதைகளைத் தமிழில் பிரபலமாக்கியவர். துப்பறியும் நாவல் முதல் வரலாற்றுப் புதினம் வரை பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதல் ஷிட்னி வரை விமர்சனம் செய்வார். எண்சீர் விருத்தப்பா முதல் ‌‌ ‌‌அய்க்கூ வரை அலசுவார். சினிமாவிற்கு அவர் போக ஆரம்பித்தபின்னால் அவரின் எழுத்து நடையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் நவீனத் தமிழ்இலக்கியத்தில் மறைத்து விட இயலாதவை.

அவர்தம் மறைவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

அது நில் கவனி தாக்கு?

said...

பினாத்தலாரே... நன்றி.. திருத்தி விட்டேன். அதைப் படித்து ரொம்ப நாளாகி விட்டது பாருங்கள்.